காலநிலை மாற்றம், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள்
ருவன் சமரவீர
10 October 2019

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் கொள்கைகளுடன் ஒருங்கிணைப்பதற்கு, தற்போதய நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் சுற்றாடலியல் கொள்கைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவசியம். இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிலையம் (IPS) தெரிவித்துள்ள கருத்தின்படி, தற்போதுள்ள கொள்கைகளில் காலநிலை எதிர்ப்புத் திறன் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி சம்பந்தமாக குறைபாடுகள் காணப்படுகின்றன. நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகள் காலநிலை மாற்றத்தின் அம்சங்களில் குறைவாகவே கவனம் செலுத்துகின்றன. அதே சமயத்தில், சுற்றாடலியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் நகர்ப்புற அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, காலநிலை மாற்றத்திற்குத் தாக்குப்பிடிக்கும் திறன் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தியைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு இடையே பொருத்தமின்மை காணப்படுகின்றது. திட்டமிடுதலைப் பொறுப்பேற்பதற்கு உள்ளூராட்சி சபைகளும் மாகாண சபைகளும் கொண்டிருக்கும் வாய்ப்புகள் போதாமல் அல்லது மட்டுப்படுத்தியதாக இருப்பதால், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளுக்கு எளிதில் இலக்காகக்கூடிய நிலையில் நகரங்கள் உள்ளன. கொள்கையின் மூன்று ஏற்புடைய துறைகளான நகரத் திட்டமிடல் கொள்கை, காலநிலை மாற்றக் கொள்கை, அனர்த்த முகாமைத்துவக் கொள்கை என்பவற்றை மீளாய்வு செய்வதன் மூலம் இந்த நிலைமையை நன்கு புரிந்துகொள்ளலாம்.

 

இலங்கையின் நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் கொள்கைகள்

இலங்கையின் நகர்ப்புறம் தொடர்பான கொள்கைகள் தேசிய மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்ளை உள்ளடக்குகின்றன. தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால்  (NPPD) வகுக்கப்பட்ட தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் (NPP) நாடளாவிய நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகளை எடுத்துக்கூறுகின்றது. இலங்கையை ஒரு கடற் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக. வர்த்தக மற்றும் அறிவு மையமாக அபிவிருத்தி செய்யும் அதே வேளையில், ட்ரான்ஸ்-ஏஷியா வேலைத்திட்டத்திற்கும் பங்களிப்புச் செய்யும் குறிக்கோளை NPP வலியுறுத்துகின்றது அத்துடன், பிரதான நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில், சுற்றாடல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை NPP குறிப்பிட்டுக் காட்டுகின்றது. ஆகவே, NPP வழிகாட்டுதலை அனுசரிப்பதற்கு பிரதேச திட்டமிடல் கொள்கைகள் அவசியம். பிரதேச மட்டத்திலான திட்டங்களை வகுப்பதற்கு பிரதேசத் திட்டமிடல் குழு பொறுப்பாக இருக்கின்றது. ஆனால், தற்சமயம் பிரதேச மட்டத்தில் நகர்ப்புற அபிவிருத்தி சம்பந்தமாக அத்தகைய ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கை எதுவும் கிடையாது. அது மாத்திரமன்றி, பௌதிகத் திட்டமிடல் நடைமுறையில் காலநிலை மாற்றத்தை ஒரு பிரதான இடர் காரணியாக NPP அங்கீகரிக்கவில்லை என்பதால், பிரதேசத் திட்டங்களிலும் இந்த விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.. அதற்குப் பதிலாக அனர்த்த இடர் குறைப்பு,  GHG வாயு வெளியேற்றம், தரைத்தோற்ற மீளமைப்பு என்பவற்றிலயே அத் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன. மேலும், உள்ளூர் நகர்ப்புற அபிவிருத்தித் திட்டமிடல் நடவடிக்கைகள் ஒரு பொதுவான பௌதிகத் திட்டமிடல் கட்டுக்கோப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதில்லை.. அதாவது, நகர்ப்புற அபிவிருத்தி என்பது காலநிலை மாற்றத்திற்கு எதிர்த்திறன் காட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அனர்த்த இடர் முகாமைத்துவத்திலயே அவை கவனம் செலுத்துகின்றன.

 

இலங்கையின் காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள்

காலநிலை மாற்றப் பிரச்சினைகளை உள்ளடக்குவதற்கான சட்டக் கட்டுக்கோப்பு எதுவும் தற்சமயம் இலங்கையில் கிடையாது. ஆகவே. ஒருங்கிணைந்து செயற்படும் சில அமைப்புகளின் தொகுதியினாலேயே இப் பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு, காலநிலை மாற்றச் செயலகம் (CCS), வளிமண்டலவியல் திணைக்களம் (DM) என்பன இந்த முயற்சியில் பிரதான பங்கை வகிக்கின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இலங்கையின் நிகழ்ச்சித்திட்டத்தில் UNFCC அமைப்பு பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றது. நிலைமைக்குத் தாக்குப்பிடிப்பதிலும் பாதிப்புக்ளைக் குறைப்பதிலும் இத் திட்டம் கவனம் செலுத்துகின்றது. இழப்பு மற்றும் சேதத்தின் பரிமாணங்கள் உருவாகிவரும் பிரச்சினையாக அவதானிக்கப்படுகின்றன. ஆகவே. 2012இல் வகுக்கப்பட்ட தேசியகாலநிலை மாற்றக் கொள்கை (NCCP),  தாக்குப்பிடித்தல், பாதிப்புக்களைத் தணித்தல் என்பன உள்ளிட்ட ஆறு துறைகளை உள்ளடக்குகின்றது. பாதிப்புக்களைக் தணிப்பதில் இலங்கை காட்டும் அக்கறையானது GHG வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் தற்போதுள்ள எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து முறையைச் சீர்திருத்துவதிலுமே கவனம் செலுத்துகின்றது. இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கான தேசிய தழுவல் திட்டம்:2016-2025 (NAP) என்பதே தாக்குப்பிடிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பிரதான கொள்கை ஆவணமாகும். காலநிலை மாற்றத்திற்கு எதிர்த்திறன் காட்டும் மனித குடியிருப்புக்களை ஏற்படுத்தும் முயற்சிக்கான நடைமுறைகளின் விரிவான பட்டியலொன்றை NAP வழங்குகின்றது. இழப்பு மற்றும் சேதத்தைப் பொறுத்தவரையில், இழப்பு மற்றும் சேதத்திற்கான வோர்ஸோ வழிமுறையுடன் இணைந்த உள்நாட்டு நடைமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை உறுதியளித்திருக்கிறது.

 

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள்

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள், அனர்த்த்த்திற்கு முன்பான திட்டமிடல், தயாராக இருத்தலும் பாதிப்புக்களைத் தணித்தலும், அனர்த்தத்தின் பின்னான நிவாரணம், மீட்பு மற்றும் புனர்வாழ்வு ஆற்றல்களை அதிகரித்தல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவதற்கான தேசிய மன்றம் (NCDM), அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) என்பன 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பொறுப்பு வாய்ந்த அதிகார அமைப்புகளாக ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அனர்த்தத்திற்கு நன்கு ஆயத்தமாகவிருப்பதற்கும் அனர்த்தத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்குமென அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான தேசிய கொள்கை (NPDM) உருவாக்கப்பட்டது. NPDM வழிகாட்டுதலுக்கமைய வகுக்கப்பட்ட இலங்கை விரிவான அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் (SLCDMP) மூலம் சாத்தியமான அனர்த்த இடர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகின்றது.

 

காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கும், நிலைபெறு தன்மையுள்ள நகரங்ளை நோக்கி  

காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு சட்டக் கட்டுக்கோப் இலங்கையில் கிடையாது என்பதால், காலநிலை தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்ளை வகுக்கும் பொறுப்பை ஏற்பதற்கு வெவ்வேறு முன்முயற்சிகள் தேவைப்பட்டன. தற்போதுள்ள கொள்கைகளின் நோக்கெல்லை மட்டுப்படுத்தப்பட்டது என்பதால், காலநிலை மாற்றக் கொள்கைகள் ஒன்றிற்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே வகுக்கப்பட்டு அமுல் செய்யப்பட்டன.

 

நகர்ப்புற அபிவிருத்தி தொடர்பான தற்போதய கொள்கைகள் காலநிலை மாற்றத்தை ஒரு பிரதான இடர் காரணியாக அங்கீகரிக்கவில்லை. GHG வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து முறையைச் சீர்திருத்துவதிலுமே தற்போள்ள நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகள் கவனம் செலுத்துகின்றன. நிறுவன ரீதியான வரையறைகள் காரணமாக இத்தகைய அநேகமான முயற்சிகள் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. தேசிய மட்டத்திலான நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகளில் இது ஒரு பெரிய இடைவெளியாகும். மறுபுறத்தில், சில பரந்த கொள்கை ஆவணங்கள் ஏற்கனவே இருந்தபோதிலும், காலநிலை மாற்றக் கொள்கை ஒரு உறுதியான சட்ட ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள், எதிர்பாராத இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சீரற்ற வானிலை நிகழ்வுகளை மையமாகக் கொண்டே செயற்படுகின்றன. அனர்த்த எதிர்ப்புத் திறனுக்கான நகர்ப்புற அபிவிருத்தியில் தற்போதுள்ள அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் போதிய கவனம்செலுத்துவதில்லை. அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள், அனர்த்த முகாமைத்துவம், பிரதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் வெவ்வேறு திட்டங்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.

 

ஆகவே, நகர்ப்புற அபிவிருத்தி, காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள், பரஸ்பரம் ஒவ்வொரு துறையிலும் அக்கறை காட்டப்பட வேண்டிய விடயங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகளை வகுக்கும்போது, ஒரு முக்கிய இடர் காரணி என்ற வகையில் காலநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பல்வேறு கொள்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும், நகர்ப்புறத் திட்டமிடலில் ஈடுபடும் பங்காளிகளுக்கு அவை முறைப்படி தொடர்பாடல் செய்யப்படுவதில்லை. எனவே, நகரங்களைப் பாதுகாப்பாகவும் எதிர்ப்பாற்றல் கொண்டதாகவும் நிலைபெறு தன்மை உள்ளதாகவும் மாற்றுவதற்கு காலநிலைப் பிரச்சினைகள், அனர்த்த இடர் முகாமைத்துவம், நகர்ப்புற அபிவிருத்தி ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கைக் கட்மைப்பு அத்தியாவசியமானதாகும்.

 

 

ருவன் சமரவீர
10 October 2019
ருவன் சமரவீர, விவசாயத் தொழில் முயற்சியைப் பின்னணியாகக் கொண்டுள்ளதுடன். IPS அமைப்பில் ஓர் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றுகின்றார். அவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்திடமிருந்து ஏற்றுமதி விவசாயத் துறையில் பட்டத்தைப் பெற்றுள்ளார். சூழலியல் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரம். பாரிய பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல், தொழிலணி மற்றும் குடியகல்வு. வறுமை மற்றும் அபிவிருத்திக் கொள்கை என்பனவே அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் விடயங்களாகும்

Comments(0)

  • Login or Register
  • Forgot Password
  • New Password
  • Register
Enter your information below
Enter your information below
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.